ஆப்பிள் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவையான ஆப்பிள் பே இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தி கடைகள், செயலிகள் மற்றும் இணையதளங்களில் பணம் செலுத்த முடியும். தற்போது இந்தியாவில் ஆக்சிஸ் வங்கி வழங்கும் விசா மற்றும் மாஸ்டர் கார்டு கிரெடிட் கார்டுகள் மட்டுமே ஆப்பிள் பேவில் பயன்படுத்தும் வகையில் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. எச்.டி.எப்.சி., ஐசிஐசிஐ உள்ளிட்ட மேலும் சில முக்கிய வங்கிகளுடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் அந்த வங்கிகளின் கார்டுகளுக்கும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆப்பிள் பேவில் தற்போது யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி இல்லை. கிரெடிட் கார்டு அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, கூகுள் பே மற்றும் போன் பே போன்ற யுபிஐ செயலிகளைப் போன்று வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்த முடியாது.
Advertisement
ஆப்பிள் பேவை பயன்படுத்துவது எப்படி? முதலில், ஆப்பிள் வாலட் செயலியில் தகுதியுள்ள கிரெடிட் கார்டை சேர்க்க வேண்டும். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட வங்கி கேட்கும் சரிபார்ப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும். கடைகளில் என்.எப்.சி வசதியுடன் கூடிய Contactless POS இயந்திரம் இருந்தால், ஐபோனை அதற்கு அருகில் வைத்து பணம் செலுத்தலாம். தற்போது ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் ஆப்பிள் பேவை பயன்படுத்த முடியும். மேக் சாதனங்களுக்கான ஆதரவு விரைவில் வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும், ஐபோன் தொலைந்துவிட்டால் Lost Mode வசதியை இயக்குவதன் மூலம் அந்த சாதனத்தில் ஆப்பிள் பே தானாகவே முடக்கப்படும். இதன் மூலம் தொலைந்த சாதனத்தை மற்றவர்கள் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்வதைத் தடுக்க முடியும்.