அமெரிக்காவின் தேர்தல் நடைமுறையை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவில் நடைபெறாத அதிபர் தேர்தல் ஒன்று நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பதிவில், இந்திய அதிபர் தேர்தலில் 12.5 கோடி பேர் வாக்களித்ததாகவும், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே அதே நாளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக, அமெரிக்காவில் தேர்தல் வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிட பல வாரங்கள் ஆகின்றன என்றும், அந்நாட்டின் வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். டிரம்ப் குறிப்பிட்ட 12.5 கோடி வாக்குகள் தொடர்பான எண்ணிக்கை, பிரேசில் அதிபர் தேர்தலுடன் ஒத்துப்போவதாக சமூக வலைதளங்களில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் 12.527 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement
அங்கு மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதனால், பிரேசில் தேர்தல் தொடர்பான தகவலைக் குறிப்பிடும்போது, தவறுதலாக இந்தியா என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அமெரிக்க தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தி வரும் டிரம்ப், இதற்கு முன்பும் இந்தியாவின் தேர்தல் நடைமுறையை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்காளர் அடையாள அட்டை முறையை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அமெரிக்காவில் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் எவ்வாறு தேர்தல் நடத்த முடியும் என்று தனது நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.