ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி 7 பேர் பலி
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலக்கலூரிபேட்டை அருகே இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பல்நாடு மாவட்டம் சிலக்கலூரிபேட்டை மண்டலத்தில் உள்ள வேலூரு கிராமத்தைச் சேர்ந்த 15 பேர், பாபட்லா மாவட்டம் கொண்டமஞ்சுளூரு கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற உறவினரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர். விழா நிறைவடைந்ததும், நள்ளிரவில் அனைவரும் ஒரே ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.இன்று அதிகாலை சிலக்கலூரிபேட்டை அட்டா ரோடு தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கி வேகமாக சென்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கடுமையாக சேதமடைந்து முற்றிலும் உருக்குலைந்தது.விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த போந்தா பாபு (62), போந்தா மானேம்மா (55), சம்பூர்ணம்மா (70), லட்சுமம்மா (75) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரும் பொதுமக்களும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.குண்டூர் மற்றும் சிலக்கலூரிபேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் கங்கம்மா (50), சவுட்டுபள்ளி சுவார்த்தா (45), மாரியம்மா (45) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.