ஆகஸ்ட் 2 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று (ஜூலை 27) முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தின் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியிலும் மிக லேசான மழை பெய்துள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
இன்று (ஜூலை 27): வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும். மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 28 மற்றும் 29: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். இதர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூலை 30: நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 31: கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், பிற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்யலாம்.
ஆகஸ்ட் 1: கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகலாம்.ஆகஸ்ட் 2: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.