அரசு கேபிளை முடக்க முயலும் தவெக..- நயினார் நாகேந்திரன் கண்டனம்
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவை பாதிக்கப்பட்டுள்ளதற்கு தவெக அரசின் நிர்வாக அலட்சியமே காரணம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தவெக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அரசு கேபிள் டிவி சேவை முடங்கும் நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முறையாக செலுத்தப்படாததால், கடந்த ஒரு வாரமாக சர்வர் செயல்படவில்லை என்றும், இதனால் செட்டாப் பாக்ஸ்களை ரீசார்ஜ் செய்யவும், புதிய இணைப்புகளை வழங்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனத்தை, தவெக அரசின் மெத்தனமான அணுகுமுறை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும், அரசு நிறுவனத்தின் செயல்பாடு சீர்குலைவதால் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு கேபிள் சேவை மறைமுகமாக சாதகமாக மாறுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எந்த அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாக இருந்தாலும், அது தடையின்றி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.எனவே, முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக தலையிட்டு, நிலுவைத் தொகையை செலுத்தி அரசு கேபிள் டிவி சேவையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்றும், 12 லட்சம் சந்தாதாரர்களின் உரிமையையும் சிறு ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.