திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளித்துவிட்டு ஈரமான உடலுடன் மின் மோட்டாரை அணைக்கச் சென்ற வாலிபர், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை பகுதியைச் சேர்ந்த முருகன் (29), புதன்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துள்ளார். பின்னர், அங்கு இயங்கிக் கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக ஈரமான உடலுடன் மின் சுவிட்சை தொட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட முருகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Advertisement
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளித்துவிட்டு மின் மோட்டாரை நிறுத்தச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.