ரூ.2 கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம், ரசிகர்களின் வரவேற்பால் இதுவரை ரூ.156.20 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் சதுர்வேதி எழுதி இயக்கிய இந்த பாலிவுட் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பக்தர்களால் ஆன்மிக குருவாக போற்றப்படும் நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை, கொள்கைகள் மற்றும் ஆன்மிக போதனைகளை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஷோபினாவ் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், வெளியான முதல் நாட்களில் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. முதல் வாரத்தில் ரூ.1.08 கோடியும், இரண்டாவது வாரத்தில் ரூ.40 லட்சமும் மட்டுமே வசூலித்தது. ஆனால் மூன்றாவது வாரத்திலிருந்து படத்தின் வசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது ஐந்தாவது வாரத்திலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் ‘ஹனுமான் அன்ஷ்’, வெளியான 32 நாட்களில் ரூ.156.20 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தற்போதைய வசூல் வேகம் தொடர்ந்தால், விரைவில் ரூ.200 கோடி வசூல் என்ற மைல்கல்லையும் இப்படம் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.2 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதைவிட 60 மடங்குக்கும் அதிகமான வருவாயை படம் ஈட்டியுள்ளது. ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லாதபோதிலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த வாரங்களில் படத்தின் வசூலை பல மடங்கு உயர்த்தியுள்ளது. புதிய திரைப்படங்களின் போட்டிக்கு மத்தியிலும் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிவரும் ‘ஹனுமான் அன்ஷ்’, குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி எதிர்பாராத அளவில் வசூல் குவித்த படங்களின் வரிசையில் தற்போது இடம்பெற்றுள்ளது.