விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசாரின் அனுமதியுடன் பொது இடங்களில் சுமார் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 1,562 சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சில சிலைகள் ஏற்கனவே கரைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பெரிய விநாயகர் சிலைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக சென்னை மாநகர போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து இப்பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் அனுமதி அளித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும், ஒதுக்கப்பட்டுள்ள சிலை கரைக்கும் இடங்களிலேயே அவற்றை கரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் பகுதிகளில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகளை கரைப்பதற்கான உபகரணங்களுடன் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர கால உதவிக்காக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மோட்டார் படகுகள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலர்கள் மற்றும் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. குதிரைப்படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் இன்றி கரைக்கப்படுவதை உறுதி செய்ய சென்னையில் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் நம்பிக்கை நகர் பகுதியில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சிலை கரைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிலை ஊர்வலங்கள் கடற்கரை பகுதிகளை நெருங்கும் நேரத்தில் போக்குவரத்து மாற்றங்களும் அமல்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், சிவசேனா சார்பில் தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, பல்லாவரம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த 75-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மேளதாளத்துடன் வேன்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த சிலைகள் பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரை பகுதியில் 2 டிராலிகள் மற்றும் 2 கிரேன்களின் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.