15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 20) மற்றும் நாளை (செப்டம்பர் 21) 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகத்தின் வழியாக வடக்கு-தெற்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று, நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்த இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 22 முதல் மழை நிலவரம் செப்டம்பர் 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் மதுரை மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். செப்டம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்காலிலும் இதே காலகட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை செப்டம்பர் 20 முதல் 23-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இந்தப் பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானிலை எப்படி? செப்டம்பர் 20-ம் தேதி சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.