மழைக்காலத்தில் மட்டுமே டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் தற்போது பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லாத நிலையிலும் டெங்கு பாதிப்பு ஏற்படுவது பொதுமக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறுகையில், மழை இல்லாத காலங்களில் குடிநீருக்காக வீடுகளில் தண்ணீரை சேமித்து வைப்பது வழக்கம். குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் போன்றவற்றில் தண்ணீர் திறந்த நிலையில் இருந்தால், அவற்றிலும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட முடியும் என தெரிவித்துள்ளனர். அதேபோல், பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் தேங்கும் நீர், பழைய டயர்கள், பயன்படுத்தாமல் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் அவை கொசுக்கள் பெருகும் இடங்களாக மாறக்கூடும். ஏடிஸ் கொசுக்கள் வளர அதிக அளவு தண்ணீர் தேவையில்லை. பெண் ஏடிஸ் கொசு, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் உட்புறச் சுவரில், நீர்மட்டத்திற்கு சற்று மேல்பகுதியில் முட்டைகளை இடுகிறது.
Advertisement
இந்த முட்டைகள் பாத்திரத்தின் சுவரில் ஒட்டிக்கொண்டு இருக்கும். பின்னர் தண்ணீர் முழுவதுமாக வற்றினாலும் அவை உடனடியாக அழிவதில்லை. வறண்ட நிலையில் பல மாதங்கள் வரை உயிருடன் இருக்கும் இந்த முட்டைகள், மீண்டும் அதே பாத்திரத்தில் தண்ணீர் தேங்கும்போது பொரிந்து புழுக்களாக மாறுகின்றன. தொடர்ந்து அவை வளர்ச்சி அடைந்து கொசுக்களாக உருவாகின்றன. எனவே, மழை பெய்யாததால் டெங்கு கொசுக்கள் உருவாகாது என்று கருதுவது சரியல்ல என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மழை இல்லாத காலங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் வீடுகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை முழுமையாக மூடி வைப்பதுடன், குடங்கள், வாளிகள் உள்ளிட்ட தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும். அவற்றில் தண்ணீர் இல்லாதபோது, பாத்திரங்களின் உட்புறத்தை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்வதும் அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.