Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

அமாவாசை நாள் ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் மறைந்த முன்னோர்களை நினைத்து திதி, தர்ப்பணம் உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொண்டால், அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுவே மகாளய அமாவாசை எனப்படுகிறது. இதற்கு பித்ரு அமாவாசை, சர்வ பித்ரு அமாவாசை, பித்ரு மோட்ச அமாவாசை உள்ளிட்ட பெயர்களும் உள்ளன. ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை நாட்களும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக, மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல் போனவர்கள், மகாளய அமாவாசை நாளில் அந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்பது நம்பிக்கை. முன்னோர்கள் ஆடி அமாவாசை காலத்தில் பித்ரு லோகத்தில் இருந்து பூமியை நோக்கி புறப்படுவார்கள் என்றும், ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் பூமியை வந்தடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதன்பின் 15 நாட்கள் பூமியில் தங்கி, தங்கள் வம்சத்தினர் அளிக்கும் உணவு மற்றும் நீரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது ஐதீகம். மகாளய அமாவாசை நிறைவடைந்ததும் அவர்கள் மீண்டும் பித்ரு லோகத்துக்குத் திரும்புவார்கள் என்றும் நம்பப்படுகிறது. ஆவணி பவுர்ணமிக்கு அடுத்ததாக வரும் பிரதமை முதல் தொடர்ந்து 15 நாட்கள் வரையிலான காலம் **மகாளய பட்சம்** எனப்படுகிறது. ‘பட்சம்’ என்பது 15 நாட்களைக் கொண்ட காலப்பகுதியைக் குறிக்கும். இந்த காலத்தின் நிறைவாக மகாளய அமாவாசை வருகிறது. முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினர் அளிக்கும் தர்ப்பணம், சிரார்த்தம், தானம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, குடும்பத்தினரை ஆசீர்வதிக்கும் காலமாக மகாளய பட்சம் கருதப்படுகிறது. மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை தர்ப்பணத்தில், குறிப்பிட்ட முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

Advertisement
ஆனால் மகாளய அமாவாசையில் தர்ப்பணம் அளிக்கும்போது, 21 தலைமுறைகளைச் சேர்ந்த பித்ருக்கள் ஒன்றாக வந்து அதைப் பெற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மேலும், முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்களும் மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்யலாம். இந்த ஆண்டு மகாளய அமாவாசை திதி அக்டோபர் 9-ந்தேதி இரவு தொடங்கி, அக்டோபர் 10-ந்தேதி இரவு நிறைவடைகிறது. இந்நாளில் முன்னோர்களின் பெயரை நினைத்து, கையில் வைத்துள்ள எள்ளின் மீது தண்ணீர் ஊற்றி, பின்னர் அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றுவது தர்ப்பண வழிபாடாகும். வழிபாடு முடிந்ததும் தெற்கு திசையை நோக்கி வணங்குவது வழக்கம். மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளைத் தயாரித்து படைப்பதும் வழக்கமாக உள்ளது. மேலும், காகத்திற்கு உணவு அளித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் பலரிடம் உள்ளது. புனித நதிக்கரைகள், கடற்கரை மற்றும் குளக்கரை உள்ளிட்ட இடங்கள் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்வதற்கு சிறப்பான இடங்களாகக் கருதப்படுகின்றன. ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், திருப்புவனம் உள்ளிட்ட தலங்களுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை பக்தியுடன் நினைத்து தர்ப்பணம் செய்வதுடன், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் போன்றவற்றை வழங்குவதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு முன்னோர்களுக்கு செய்யப்படும் வழிபாடுகள் அவர்களின் ஆசீர்வாதத்தையும், குடும்பத்தின் வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு