இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் இடம்பெறுகின்றன. முதல் மற்றும் மூன்றாவது போட்டிகள் லிங்கனிலும், இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணியின் கேப்டன் ரைஸ் மரியு முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி, நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நான்கு வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும், நான்கு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். யஷ் ரத்தோட் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆதரவாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 77 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்கள் சேர்த்தார்.
Advertisement
நியூசிலாந்து ஏ அணியின் பந்துவீச்சில் சைமன் கீன் ஆதிக்கம் செலுத்தி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜாக் கிப்சன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரைஸ் மரியு 76 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். கர்டிஸ் ஹீபி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலம் நியூசிலாந்து ஏ அணி, இந்தியா ஏ அணியை விட 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சில் அவ்கிப் நபி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும், முகேஷ் சௌத்ரி 30 ரன்கள் வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி குறைந்த ரன்களில் சுருண்ட நிலையில், நியூசிலாந்து ஏ அணி முன்னிலை பெற்று போட்டியில் தனது ஆதிக்கத்தைத் தொடங்கியுள்ளது.