திருவாரூர் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகேயுள்ள கருப்புக்கிளார் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (61). இவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள முத்தையா செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விமலாவும் சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் பயிற்சி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்தத் தம்பதிக்கு விக்னேஷ் என்ற மகனும், யோகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், மகன் சென்னையிலும், மகள் ஓசூரிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளுக்குச் சீர் வழங்குவதற்காக கோவிந்தராஜும், விமலாவும் ஓசூருக்குச் சென்றுள்ளனர். அங்கு மகளுக்குச் சீர் கொடுத்துவிட்டு, நேற்று காலை சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறை முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது.
Advertisement
மேலும், இரும்புப் பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காசுமாலை, வளையல்கள், நெக்லஸ் உள்ளிட்ட 168.5 பவுன் தங்க நகைகளும், 4 கிலோ வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கோவிந்தராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்துகொண்ட கொள்ளையர்கள், சம்பவத்தன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொள்ளையர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி சீர் கொடுக்கச் சென்றிருந்த நேரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.