தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் தாஸ், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வருகை தருகின்றனர். அந்த வகையில், நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை திருப்பதிக்கு வந்தார். அங்கு விஐபி பிரேக் தரிசனம் வாயிலாக ஏழுமலையானை தரிசித்த அவர், மனமுருகி இறைவனை வழிபட்டார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகுல மண்டபத்தில் அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓதியபடி ஆசி வழங்கினர்.
Advertisement
இதையடுத்து, அவருக்கு ஸ்ரீவாரி தீர்த்தப் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அர்ஜுன் தாஸ் கோவிலுக்கு வந்த செய்தி அறிந்த ரசிகர்கள், அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வத்துடன் குவிந்தனர். ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களுடன் புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதற்கிடையே, மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'ஜான் டோ' (John Doe) திரைப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், அதன் வெற்றிக்காக வேண்டிக்கொள்ளும் நோக்கில் நடிகர் திருப்பதி சென்றதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.