தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மூட்டம்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கு திசையில் நகர்ந்த இந்த அமைப்பு, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அர்னாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதே பகுதிகளில் மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், நாளை (புதன்கிழமை) முற்பகலில் ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 140 கி.மீ. வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.