தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பள்ளி நிர்வாகிகளிடம் சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அரசகுமார் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமார், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக இதுவரை 117 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தப் புகார்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.