திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்கந்தமாதா தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனின் அழகிய திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு, கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில், நேற்று ஐந்தாம் நாள் உற்சவத்தின்போது ஸ்கந்தமாதா தேவி அலங்காரத்தில் தாயார் எழுந்தருளினார். இதையொட்டி கோவிலுக்கு வந்திருந்த திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர். இதற்கிடையே, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள கனக துர்க்கையம்மனுக்கு லலிதா தேவி அலங்காரம் செய்யப்பட்டு, தீபம், தூபம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. மேலும், முத்தியாலம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள முத்தியாலம்மன் கோவிலிலும், ஏழுகங்கையம்மன் கோவிலிலும் அம்மன்களுக்கு ஸ்கந்தமாதா தேவி அலங்காரம் செய்யப்பட்டது. இந்தக் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயார் சிறப்பு அலங்காரத்தில் தரிசனம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள ரெங்கநாயகி தாயார் சன்னதியில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று (அக்டோபர் 15), மாலை ரெங்கநாயகி தாயார் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த தாயாரை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காளகா அம்பிகை அலங்காரம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (அக்டோபர் 15), மாலை சமயபுரத்தாள் காளகா அம்பிகை அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து திருவீதியுலா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அம்மனை வழிபட்டு அருள்பெற்றனர்.