ஸ்ரீரங்கம் கோவில் சொத்து மோசடி: யார் பின்னணியில் இருந்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ், கோவில் சொத்துகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து பேசினார். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் தற்போது கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார். அந்த வகையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 1866-ம் ஆண்டு ஆவணங்களின்படி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமாக 329 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், 1910 மற்றும் 1930-ம் ஆண்டு பதிவேடுகளிலும் அந்த நிலங்கள் கோவில் சொத்துகளாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஸ்ரீரங்கம் தி.மு.க. பகுதி செயலாளர் ராம்குமார் என்பவர் உரிய மூலப்பத்திரங்கள் இல்லாமல் போலி ஆவணங்களை தயாரித்து, கோவில் நிலத்தை தனது பெயருக்கு மாற்றியதாகவும், அந்த இடத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்ததாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். முறைகேடு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.50 கோடி எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மூலம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன்பேரில் தற்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த மோசடியில் யார் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கோவில் சொத்துகளை பாதுகாப்பதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெளிவான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறினார். மேலும், சட்டசபையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று தொடர்ந்து பேசுவதாக குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், அவ்வாறு கூறும் நிலையில் பெருமாள் கோவில் சொத்துகளை தி.மு.க.வினருக்கு கட்சி அலுவலகம் நடத்த பயன்படுத்த அனுமதிக்கலாமா என்றும் கேள்வி எழுப்பினார். ஸ்ரீரங்கம் பகுதி மக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பொதுமக்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும், கோவில் சொத்துகள் மீட்கப்படும் என்றும் அவர் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு அந்த இடத்தில் தி.மு.க. அலுவலகம் செயல்படுவதாக கூறிய அமைச்சர் ரமேஷ், இதுதொடர்பான ஆவணங்களையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.