ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக் கட்டணம் வசூல்: வாகன ஓட்டிகள் வரவேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக் கட்டணம் வசூல்: வாகன ஓட்டிகள் வரவேற்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக் கட்டணம் வசூல்: வாகன ஓட்டிகள் வரவேற்பு

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடியில் தடையில்லா தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களைத் தடுப்புகள் முன்பு நிறுத்தி கட்டணம் வசூலிப்பதால் நீண்ட வரிசையும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில், தடுப்புகள் இல்லாமல் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் வாகனங்களின் பதிவு எண்களையும், அவற்றில் உள்ள ஃபாஸ்டேக் விவரங்களையும் அடையாளம் கண்டு சரிபார்க்கின்றன. இதையடுத்து, ஃபாஸ்டேக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் தானாகவே கழிக்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்முறையாக செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த அக்டோபர் மாதம் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்துள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்ததுடன், மாநிலம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடியிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தடையில்லா கட்டண வசூல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மற்ற சுங்கச்சாவடிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடுத்தகட்டமாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா அருகே அமைந்துள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியிலும் சோதனை ஓட்டங்கள் முடிந்த பிறகு இத்திட்டத்தை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாவிட்டாலோ அல்லது செல்லாத ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்தினாலோ, வழக்கமான சுங்கக் கட்டணத்தை விட இரு மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும். இதற்கான மின்னணு நோட்டீசும் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும்.