வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்... காதலியை மலையிலிருந்து தள்ளிக் கொன்ற காதலன்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்... காதலியை மலையிலிருந்து தள்ளிக் கொன்ற காதலன்

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்... காதலியை மலையிலிருந்து தள்ளிக் கொன்ற காதலன்

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் காதலியை மலையிலிருந்து பள்ளத்தாக்கில் தள்ளிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கோலாப்பூர் மாவட்டம், கர்கோட்டி நகரைச் சேர்ந்த தரன்னும் (23) என்பவரும், ஸ்ரீபாத் வதார் (25) என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு முன்பு தரன்னுமிற்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ஸ்ரீபாத் வதாருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். காதலி தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ஸ்ரீபாத் வதார், கடந்த 9-ஆம் தேதி பிற்பகலில் அவரைச் சந்திக்கத் திட்டமிட்டார். திருமணத்திற்கு முன்பு இதுவே தங்களின் கடைசி சந்திப்பு என்று கூறி, பூதர்காட் பகுதியில் உள்ள நாயக்வாடி நீர்வீழ்ச்சிக்கு தரன்னுமை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தரன்னுமிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீபாத் வதார், நீர்வீழ்ச்சி அருகே இருந்த மலையிலிருந்து தரன்னுமை ஆழமான பள்ளத்தாக்கில் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ஸ்ரீபாத் வதார், தனது குடும்பத்தினரிடம் முன்னுக்குப் பின் முரணான வகையில் ஒரு கதையைக் கூறியுள்ளார். நீர்வீழ்ச்சிக்குச் சென்றபோது தரன்னுமுக்குத் தாகம் எடுத்ததாகவும், அவருக்குத் தண்ணீர் எடுத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவர் காணாமல் போய்விட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதற்கிடையே, தரன்னுமின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பூதர்காட் போலீசார், அவர் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஸ்ரீபாத் வதாரிடம் விசாரித்தபோது, அவர் அளித்த பதில்களில் முரண்பாடுகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள தரன்னும் மறுத்ததால் அவரைப் பள்ளத்தாக்கில் தள்ளிக் கொலை செய்ததை ஸ்ரீபாத் வதார் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் அடையாளம் காட்டிய இடத்தில், மீட்புக் குழுவினரின் உதவியுடன் தரன்னுமின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கொலை வழக்குப்பதிவு செய்தபோலீசார் ஸ்ரீபாத் வதாரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மராட்டிய மாநிலத்தில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.