நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த ஜெய ஆனந்தன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் இலங்கைக்கு சென்று அந்நாட்டு குடியுரிமையை பெற்றதாகவும், பின்னர் குடும்பத்துடன் கொழும்பில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, இந்திய வாக்காளர் பட்டியலில் தனது பெயர் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதை அறிந்ததாகவும், இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்ததாகவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தன் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இலங்கைக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, வெளிநாட்டு குடியுரிமையை பெற்ற ஒருவர், இந்திய வாக்காளர் பட்டியலில் தனது பெயர் தொடர்ந்து இருப்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்திய குடிமக்களுக்கான வாக்குரிமையை கோர முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், மனுதாரர் தனது இலங்கை பயணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு தேவையான நேரத்தில் அழைத்தால் நேரில் ஆஜராக உறுதி அளிக்கும் உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்து, இலங்கை செல்ல அனுமதி கோரி உரிய முறையில் விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். வெளிநாடு செல்வது தனிநபரின் சுதந்திரம் என்றாலும், அது முழுமையான உரிமை கிடையாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் ஒருவர், சட்ட விதிகளுக்கு உட்பட்டே வெளிநாடு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார். எனவே, மனுதாரர் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற்ற பின்னரே இலங்கைக்கு செல்ல முடியும் என உத்தரவிட்ட நீதிபதி, ஜெய ஆனந்தன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.