தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் கடந்த 2-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய்யால் தொடங்கப்பட்டது. த.வெ.க. தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு எதிராக ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வெற்றிப்பயணத் திட்டத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டு, தங்களது தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படலாம் என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டம் வழங்கிய சம உரிமைக்கு எதிரானது என்றும் அவர் கூறியிருந்தார். வெற்றிப்பயணத் திட்டத்தின் பயனாளிகளுக்கான கட்டணமாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடியை அரசு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதே அடிப்படையில் தனியார் பஸ்களுக்கும் இழப்பீடு வழங்கி இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்டசபையில் முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், இதுவரை இதுதொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, வெற்றிப்பயணத் திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலேயே வெற்றிப்பயணத் திட்டம் தொடங்கப்பட்டதாக வாதிடப்பட்டது. இதையடுத்து, இரண்டு வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகளை இயக்கும் உரிமையாளர், தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு எதிரான இந்த வழக்கை பொது நல வழக்காக கருத முடியுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெற்றிப்பயணத் திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.