தமிழ்நாடு அரசின் வெற்றிப்பயணத் திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்திருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் வெற்றிப்பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் திருநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா பேருந்து சேவை, தற்போது விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட (LSS) மற்றும் சொகுசு (Deluxe) பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்திருப்பது பாராட்டுக்குரியது. பெண்கள் மற்றும் திருநர்களைப் போலவே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப்பயணத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கடந்த 09.09.2026 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சரின் அறிவிப்பை உறுதிப்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.