வெற்றிப் பயண திட்டத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வெற்றிப் பயண திட்டத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்

வெற்றிப் பயண திட்டத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்

தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த ‘விடியல் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் கடந்த 2-ந்தேதி முதலமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 600-க்கும் அதிகமான பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது மனுவில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் கடுமையான நிதி இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இதனால் தொழிலை தொடர முடியாத சூழல் உருவாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பெண்களிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிரானது என்றும் அவர் வாதிட்டிருந்தார். அத்துடன், இந்த திட்டத்தின் மூலம் பயணம் செய்யும் பெண்களுக்கான கட்டணச் செலவாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடியை அரசு ஏற்கும் நிலையில், தனியார் பஸ்களுக்கும் அதேபோல் இழப்பீடு வழங்கி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததாகவும், அந்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்டசபையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். எனவே, ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்றும், வழக்கு முடிவடையும் வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், மனுதாரர் ஈரோட்டில் இரண்டு வழித்தடங்களில் மட்டுமே பஸ்களை இயக்கும் தனியார் பஸ் உரிமையாளர் என்றும், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை எதிர்த்து அவர் எவ்வாறு வழக்கு தொடர முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலேயே ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை பொதுநல வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.