வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்து, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழர்களின் வீரத்தையும் துணிச்சலையும் காலம் கடந்தும் எடுத்துரைக்கும் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கும் அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல், மண்ணின் உரிமையையும் மக்களின் விடுதலையையும் காக்க உறுதியுடன் போராடியவர் கட்டபொம்மன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் விடுதலைக்காக அவர் வெளிப்படுத்திய வீரத்தையும் செய்த தியாகத்தையும் என்றும் நினைவில் கொண்டு போற்றுவோம் என டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.