வீரம், தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பவர் பசும்பொன் திருமகனார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: விடுதலைப் போராட்டக் காலத்தில் நேதாஜியுடன் இணைந்து பணியாற்றிய துணிச்சல் மிக்க தலைவராகவும், குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவராகவும் பசும்பொன் திருமகனார் திகழ்ந்தார். விவசாயிகள் நலன் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கங்களை உருவாக்கி, அவற்றுக்காகப் போராடி சிறை சென்றவர். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரு அவைகளிலும் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்த சிறப்புக்குரியவர். இத்தகைய பெருமைகளைப் பெற்ற பசும்பொன் திருமகனாரை, மக்கள் 'பத்தரை மாற்றுத் தங்கம்', 'பசும்பொன் சிங்கம்' எனப் போற்றினர். வீரத்துக்கும் தியாகத்துக்கும் முன்னுதாரணமாகத் திகழும் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் என மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.