நடிகர் அசோக் செல்வன் தனது பெற்றோரின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து “அன்பில் அவன்” திரைப்படத்தை தயாரித்ததாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன், “சூதுகவ்வும்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளார். அந்த வகையில், அசோக் செல்வன் தற்போது “அன்பில் அவன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இது அவரது 23-வது படமாகும். இப்படத்தில் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். “போர் தொழில்” படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா கதையை எழுதியுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். “ஓ மை கடவுளே” படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அசோக் செல்வன் இப்படத்தை தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் அம்சங்களுடன் உருவாகியுள்ள “அன்பில் அவன்”, அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லரின் இறுதியில், சுமார் 70 அடி உயரமுள்ள மலையிலிருந்து அசோக் செல்வன் டூப் பயன்படுத்தாமல் நீரில் குதிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சியை படமாக்கிய விதம் தொடர்பான படக்குழுவின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், “அன்பில் அவன்” படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அசோக் செல்வன், தனது பெற்றோருக்கு முதலில் நன்றி தெரிவித்தார். படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில், தனது அப்பா மற்றும் அம்மாவின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்ததாக அவர் கூறினார். மேலும், தனது பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் கடின உழைப்பு இருக்கும் என்பதே தனது உறுதி என்றும், “அன்பில் அவன்” தனக்கு மிகவும் சிறப்பான படம் என்றும் அசோக் செல்வன் தெரிவித்தார். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் நடிகர்கள் கவுதம் கார்த்திக், ஹரீஷ் கல்யாண், இயக்குநர்கள் விக்னேஷ் கார்த்திக், அஸ்வத் மாரிமுத்து, ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.