தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினர்.இந்தச் சந்திப்பின்போது, டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தியதற்கும், சட்டமன்றத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பியதற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் போராடிய எதிர்க்கட்சித் தலைவரை த.வெ.க. அரசின் காவல்துறை கைது செய்தது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாத த.வெ.க. அரசைக் கண்டித்து, கூட்டு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள 84 விவசாய அமைப்புகளும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களது போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதுடன், சட்டமன்றத்திலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞரின் வழியிலும், கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படியும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்போம் என உறுதியளித்தார். மேலும், விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.