விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமாவதியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், மலைக்குன்றுகள் உள்ளிட்ட பகுதிகளில் 50 டிரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமியைக் கண்டுபிடிக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட தனிப்படைகளுடன் கூடுதலாக மேலும் 3 தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு மாயம் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசிப்பவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதியின் இரண்டாவது மகளான 7 வயது ஹேமாவதி, கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை சுமார் 5 மணியளவில் காணாமல் போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சிறுமியை மீட்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்ற தேடுதல் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். ஆலம்பூண்டி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் போலீசார், வீடுகளின் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தடய அறிவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர், சிறுமியின் வீட்டிலும் அதைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளிலும் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். டிரோன்கள் மூலம் தீவிர தேடுதல் சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் ஆகிய இடங்களில் தேடுதல் நடைபெற்று வருகிறது. மலைக்குன்றுகளில் உள்ள குகைகள் மற்றும் பாறைகளின் இடுக்குகளிலும் சிறுமி இருக்கிறாரா என 50 டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தீயணைப்புத் துறையினரும் ஆலம்பூண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிணறுகளில் இறங்கி தேடுகின்றனர். மரக்காணத்தில் இருந்து மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் ஆழமான பெரிய கிணறுகளிலும் தேடுதல் பணி மேற்கொள்ளப்படுகிறது. தொலைபேசி தரவுகள் அடிப்படையிலும் விசாரணை சிறுமி காணாமல் போனது தொடர்பாக தொலைபேசி அழைப்பு விவரங்கள் (சிடிஆர்) மற்றும் செல்போன் கோபுரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஐந்து நாட்களாகத் தொடர்ந்து தேடியும் சிறுமி குறித்த உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. சிறுமி எங்கு இருக்கிறார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாததால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தனிப்படைகளுடன் கூடுதலாக மேலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.