திருவொற்றியூரில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற 35 வயது தொழிலாளி, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். திருவொற்றூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (35), அங்குள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காமாட்சி. விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் கமலக்கண்ணன் தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார். பின்னர் மாலையில், அந்த சிலையை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று எண்ணூர் பாரதியார் நகர் அருகே கடலில் கரைத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த காமாட்சி, அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், அழைப்பை கமலக்கண்ணன் எடுக்கவில்லை. இதையடுத்து பாரதியார் நகர் கடற்கரைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு கமலக்கண்ணன் சென்ற மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் அவரது செல்போனும் இருந்தது. இதுகுறித்து காமாட்சி எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடலில் இறங்கி கமலக்கண்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் உடனடியாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கமலக்கண்ணனின் உறவினர்கள், அவரது உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு திருவொற்றூர் எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்குச் சென்று, தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் மீட்புப் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் பணியில், சம்பவ இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் நேற்று காலை கமலக்கண்ணனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் எண்ணூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற தொழிலாளி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.