பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தர்மா, சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சிலையுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்திருந்தார். அதில், கச்சத்தீவை தமிழக அரசு மீட்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கச்சத்தீவில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், திண்டுக்கல் பாரதிபுரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு செல்லப்போவதாக பாரதிய இந்து மக்கள் கட்சியினர் நேற்று அறிவித்தனர். இதையடுத்து, தர்மா தலைமையில் கட்சியினர் கச்சத்தீவில் விநாயகர் வழிபாடு நடத்துவதற்காக 3 அடி உயர விநாயகர் சிலை மற்றும் பாரத மாதா உருவப்படத்துடன் புறப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் உடனடியாக அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். கச்சத்தீவுக்கு செல்ல முயன்றதாக தர்மா உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் எடுத்துச் சென்ற விநாயகர் சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.