விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் நாளை (அக்டோபர் 16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் ஏற்கெனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக ‘ரணபாலி’ திரைப்படம் மூலம் இருவரும் ஒன்றாகத் திரையில் தோன்றவுள்ளனர். ராகுல் சங்கிருதயன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ‘மம்மி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். 1870-களில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலவிய சூழலையும், அப்போது ஏற்பட்ட பெரும் பஞ்சத்தையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றப் போராடும் புரட்சிகர வீரனின் வாழ்க்கையைச் சொல்லும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படமாக இது உருவாகியுள்ளது. ‘ரணபாலி’ படத்தின் படப்பிடிப்பு 29 நாட்களில் நிறைவடைந்ததாகப் படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. , தணிக்கை வாரியம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ‘ரணபாலி’, அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.