உளுந்தூர்பேட்டை: கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக வி.ஏ.ஓ., ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகக் கூறி, அந்தப் பணத்தைத் திரட்டுவதற்காக டிப்-டாப்பாக உடையணிந்த ஒருவர் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அருகே கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலீம் ஷேக், 45. இவரது மனைவி தாஹிரோன், 40. நொனையவாடி கிராமத்தைச் சேர்ந்த தாஹிரோன், குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தின் கூட்டு பட்டாவில் தனது பெயரை சேர்க்கக் கோரி கடந்த மார்ச் மாதம் எலவனாசூர்கோட்டை வி.ஏ.ஓ.,விடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில், கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ., ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக அப்துல்சலீம் ஷேக் குற்றம்சாட்டினார். இதையடுத்து, உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் கையில் தட்டு ஏந்தியபடி பொதுமக்களிடம் பிச்சை எடுக்கத் தொடங்கினார். அவர் வைத்திருந்த பதாகையில், “வாழ்க தமிழ், ஒழியட்டும் ஊழல்” என்றும், பூர்வீக சொத்தின் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் மக்களிடம் பிச்சை எடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜீன்ஸ், சட்டை அணிந்து, கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றுடன் டிப்-டாப் தோற்றத்தில் வலம் வந்தபடி, வி.ஏ.ஓ.,வுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் திரட்ட பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.