‘வி த லீடர்ஸ்’ அரசியல் இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு.நாகராஜனை நியமித்து, அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அமைப்பின் வளர்ச்சியையும், அதன் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைப்புப் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன், மாநிலம் முழுவதும் இயக்கத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், நிர்வாக அமைப்பை வலுப்படுத்துதல், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரு.நாகராஜனின் அரசியல் அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புகள் மூலம் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு மேலும் வலுப்பெறும் என்றும், அதன் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் விரிவுபடுத்தப்படும் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் அனைத்து நிலைகளிலும் கட்டமைப்பை வலுப்படுத்தவும், அமைப்பின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லவும் கரு.நாகராஜனுக்கு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5-ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகி ‘வி த லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இயக்கமாக செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.