சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வந்ததைக் கண்டித்து, 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பகல் நேரம் மட்டுமின்றி, நள்ளிரவிலும் பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தூக்கமின்றி சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவும் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நள்ளிரவில் வீடுகளில் இருந்து வெளியே வந்து, வாழப்பாடி-பேளூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் மின்வெட்டை உடனடியாக சரிசெய்து, தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக அந்த சாலையில் நள்ளிரவு நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்வெட்டு பிரச்சினை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வாழப்பாடி பகுதியில் நள்ளிரவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.