நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் அடுத்த படைப்பான “வாரணாசி” திரைப்படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜமவுலி, மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சர்வதேச அளவிலான ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் வெளியான படத்தின் புகைப்படத்தில், ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மகேஷ் பாபு கம்பீரமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். அவருக்குப் பின்னால் ஒட்டகச்சிவிங்கிகள் காணப்பட்டன. காட்டுப் பகுதிகளில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இந்தக் காட்சியின் மூலம் தெரியவந்தது. சுமார் ரூ.1,400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் “வாரணாசி”, இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக கூறப்படுகிறது. கி.பி. 512 முதல் இன்றைய காலம் வரையிலும், திரேதா யுகம் முதல் கலியுகம் வரையிலுமான பல்வேறு காலகட்டங்களை இணைத்து, அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மிக சாகசம் கலந்த கதைக்களத்தில் படம் உருவாக்கப்படுகிறது. விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் விண்கல் ஏற்படுத்தும் ஆபத்து மற்றும் வாரணாசி படித்துறைகளுடன் தொடர்புடைய மர்மங்கள் ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத், ஒடிசா, கென்யாவின் ஆப்பிரிக்கக் காடுகள் மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மகேஷ் பாபுவுடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி படத்திற்கு இசையமைக்கிறார். கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். முழுமையாக ஐமாக்ஸ் தொழில்நுட்பத்துடன் 3D வடிவில் உருவாகும் இப்படம், 2027 ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகேஷ் பாபு தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, “வாரணாசி” திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது.