வாய்கிழிய வசனம் பேசிய முதல்-அமைச்சர் எங்கே? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வாய்கிழிய வசனம் பேசிய முதல்-அமைச்சர் எங்கே? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

வாய்கிழிய வசனம் பேசிய முதல்-அமைச்சர் எங்கே? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் இருந்தபோதே மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து பேசி வரும் முதல்-அமைச்சர், இந்த விவகாரத்தில் எங்கே இருக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசுப் பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்-அமைச்சர் வர உள்ள நிலையில், இந்தச் சம்பவத்தை காவல்துறையும் அதிகாரிகளும் மறைக்க முயற்சிப்பதாகவும், சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்ப முயற்சி நடப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றியதுடன், சம்பவம் குறித்து வெளியில் பேசக்கூடாது என மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதுடன், அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து பள்ளி வளாகங்களிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலை காரணம் காட்டி இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்தால், அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.