திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வள்ளூரைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் சிவசுப்பிரமணியன் (52) அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தார். கடந்த 5.10.2026 அன்று மது போதையில் உடலில் காயங்களுடன் வீட்டுக்குச் சென்ற அவர் பின்னர் உயிரிழந்தார். இதையடுத்து வள்ளியூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிவசுப்பிரமணியன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அவருடன் இருந்த சிலருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 5 பேர் சேர்ந்து அவரை தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் வள்ளியூரைச் சேர்ந்த சந்தனசுதன் (29), மணிகண்டன் என்ற கொண்டா (33), முத்துகிருஷ்ணன் என்ற தழும்பு முத்துகிருஷ்ணன் (45), களக்காட்டைச் சேர்ந்த சாமிநாதன் (36), மஞ்சங்குளத்தைச் சேர்ந்த பாண்டி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.