வள்ளலாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் வள்ளலாரின் கொள்கைகளை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார். அந்த அறிக்கையில், அருட்பெருஞ்ஜோதி மற்றும் தனிப்பெருங்கருணையின் அடையாளமாக விளங்கிய திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளில், அவரது உயர்ந்த சிந்தனைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், பசியால் வாடும் உயிர்களுக்கு உணவு வழங்குவது இறைவழிபாட்டுக்கு இணையானது என்றும், சாதி-மத வேறுபாடுகளின்றி அனைத்து உயிர்களையும் தம்மைப் போல நேசிப்பதே சன்மார்க்கத்தின் அடிப்படை என்றும் வள்ளலார் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுவதே வாழ்வின் முக்கிய நெறி என்ற வள்ளலாரின் கொள்கைகள், மனிதநேயத்தின் உயர்ந்த மதிப்புகளாக இன்றும் திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதி, அன்பும் கருணையும் நிறைந்த வள்ளலாரின் வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.