நடிகை சமந்தா தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் வெளியான ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாகவும், குழந்தை பிறந்த பிறகு மீண்டும் திரையுலகில் நடிக்க வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமந்தாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். தனது முதல் குழந்தையின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் சமந்தா, வளைகாப்பு நிகழ்வு குறித்த பதிவில் பாரம்பரிய சடங்குகள் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு சடங்கின் பின்னணியிலும் இருக்கும் அர்த்தத்தை தன்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம் என்றாலும், பாரம்பரியங்களின் மீது தனக்கு எப்போதும் ஆழ்ந்த மரியாதை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மந்திரங்கள் உச்சரிக்கப்படும்போது உருவாகும் ஒலியிலும், அந்த மந்திரங்களைச் சொல்வதன் மூலம் ஏற்படும் சக்தியிலும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார். பாரம்பரிய நடைமுறைகள் மூலம் இந்த ஆற்றல் மிகுந்த கவனத்துடன் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து பரிமாறப்பட்டு வருவதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். வளைகாப்பு நிகழ்வின்போது ஸ்ரீவித்யா உபாசகா என்பவர், ஒவ்வொரு சடங்கையும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதையும், அவற்றின் ஆழமான முக்கியத்துவத்தையும் சமந்தாவுக்கு விளக்கி வழிகாட்டியுள்ளார். இதுகுறித்து சமந்தா தனது பதிவில், ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கமும் அர்த்தமும் இருப்பதையும், அதனுடன் தொடர்புடைய ஒவ்வொரு செயலுக்கும் தனித்துவமான இடம் இருப்பதையும் படிப்படியாக புரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி எவ்வளவு அர்த்தமுள்ளதாகவும் ஆழமான நோக்கத்துடனும் நடத்தப்படுகிறது என்பதையும் மெல்ல உணர்ந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.