தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையில் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்குத் தேர்வான 69 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், தேசிய அளவில் விருதுகளைப் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். 69 பேருக்கு அரசு வேலை தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இப்பணிகளில் ஏற்படும் காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 பேருக்கு முதலமைச்சர் விஜய் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். தேசிய விருதுகளைப் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட்: 2024–2025ஆம் ஆண்டுக்கான நிதி மேலாண்மையில் முதல் பரிசு. செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட்: 2024–2025ஆம் ஆண்டுக்கான சமூகப் பொறுப்புக்கான விருது. சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட்: 2025–2026ஆம் ஆண்டுக்கான நிதி மேலாண்மையில் முதல் பரிசு. கள்ளக்குறிச்சி-II கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட்: சிறந்த செயல்திறன் கொண்ட சர்க்கரை ஆலைக்கான விருது. இந்த விருதுகளைப் பெற்ற நான்கு ஆலைகளின் செயலாட்சியர்களும் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து விருதுகளைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், தலைமைச் செயலாளர் சாய்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையரும் துறைச் செயலாளருமான வெங்கடேஷ், சர்க்கரைத் துறை ஆணையர் கண்ணன், வேளாண்மை இயக்குநர் முரளீதரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் விஜயா ராணி, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், விருதுகளைப் பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களான பிரியா, டாக்டர் மேனகா, பூங்கோதை மற்றும் பொறுப்புச் செயலாட்சியர் மணிராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.