தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், வைகை ஆற்றின் முக்கிய நீராதாரமான மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளிமலை, மேகமலை மற்றும் வருசநாடு வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் தாக்கமாக வருசநாடு, வாலிபாறை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், காந்தி கிராமம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகள் வழியாகச் செல்லும் மூலவைகை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஆற்றில் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆற்றில் இறங்கிக் குளிப்பது, நீரைக் கடந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகமும் வருவாய்த் துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, மூலவைகை ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்து வைகை அணைக்கு கூடுதல் நீர் கிடைக்க வழிவகுக்கும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், விவசாயப் பாசனத்துக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.