உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.இதற்கிடையே, கங்கை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் அபாய அளவை கடந்துள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழலில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அவர் நேரடியாககவனம்செலுத்தியுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சத்யேந்திர குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.குறிப்பாக, நிவாரண முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடர்பான நிலவரங்களை மாவட்ட கலெக்டரிடம் இருந்து பிரதமர் மோடி விரிவாக கேட்டறிந்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அவசர உதவிகளும் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.இதனிடையே, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பரூக்காபாத் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவர், பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.