விமான டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்வு: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

விமான டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்வு: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

விமான டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்வு: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், இண்டிகோ நிறுவனம் விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. குறிப்பாக விமான எரிபொருளின் விலை லிட்டருக்கு ரூ.16 அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு விமானப் பயணக் கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும் எரிபொருள் துணைக் கட்டணத்தை இண்டிகோ உயர்த்தியுள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான பயணக் கட்டணம் அதிகரிக்கிறது. உள்நாட்டு விமானப் பயணங்களில் பயணிக்கும் தொலைவைப் பொறுத்து ரூ.100 முதல் ரூ.350 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். சர்வதேச விமானங்களுக்கு 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு ரூ.375 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 501 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்துக்கு ரூ.600-ம், 1,001 முதல் 1,500 கி.மீ. வரை ரூ.900-ம் கூடுதலாக வசூலிக்கப்படும். 1,501 முதல் 2,000 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.1,150 அதிகரிக்கிறது. 2,000 கி.மீ.க்கு மேற்பட்ட சர்வதேச பயணங்களுக்கு ரூ.1,300 கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். சார்க் பிராந்திய நாடுகளுக்கான விமானப் பயணங்களில் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.6,000-மும், ஐரோப்பிய நாடுகளுக்கான கட்டணம் ரூ.10,000-மும் உயர்கிறது. அதேபோல், தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளுக்கான விமானப் பயணக் கட்டணம் ரூ.5,500 வரை அதிகரிக்கப்படுகிறது. இண்டிகோ அறிவித்துள்ள இந்தக் கட்டண மாற்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. கடந்த சில மாதங்களாக விமான எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மாத அடிப்படையில் அதன் விலை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் விமான எரிபொருள் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, எரிபொருள் விலை உயர்வு இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்களின் செலவு கட்டமைப்பிலும் அவற்றின் பொருளாதார நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக இருப்பதாகக் கூறியுள்ள இண்டிகோ, இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தினசரி 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை உள்நாடு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.