வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (செப். 21) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். கடல் நீர் உட்புகுதல், கடல் அரிப்பு, வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, பாதிக்கப்பட வாய்ப்புள்ள கடலோர கிராமங்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் விவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மீனவர்களுக்கு வானிலை மற்றும் கடல் தொடர்பான எச்சரிக்கைகள் சரியான நேரத்தில் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான திட்டங்களைத் தயாராக வைத்திருப்பதுடன், புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களையும் பயன்பாட்டுக்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினார். பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்களை தேவையான நேரங்களில் நிவாரண முகாம்களாக பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், அங்கு குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். அவசரகால மீட்புப் பணிகளுக்காக மாவட்ட அளவிலான மீட்புக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், படகுகள், உயிர்காக்கும் மிதவைகள், கயிறுகள், மின்உற்பத்தி இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களும் தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும், பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் பிற எச்சரிக்கை வழிமுறைகள் மூலம் உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்றும், செயற்கைக்கோள் தொலைபேசி உள்ளிட்ட அவசரகால தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் மழைநீரால் சேதமடையாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். சாலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் பாலங்களின் நிலையை ட்ரோன் மூலம் ஆய்வு செய்து, தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் தெரிவித்தார். பருவமழைக் காலத்தில் நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தின்போது, எல்-நினோ காலநிலை மாற்ற நிகழ்வு தொடர்பாக பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவின் முதற்கட்ட ஆய்வறிக்கையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், முதலமைச்சர் விஜயிடம் வழங்கினார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் டெங்கு காய்ச்சல் நிலவரம் தொடர்பாக மாநில அளவில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட வாரியாக டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, நோய் அதிகரித்து வரும் பகுதிகள், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. கொசுப்புழு மற்றும் முதிர்ந்த கொசுக்களை ஒழிக்கும் பணிகளும், புகை மருந்து தெளிக்கும் உபகரணங்களின் இருப்பும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. வீடுதோறும் களஆய்வு நடத்தி, Aedes கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகிய பணிகளை கொசுப்புழு ஒழிப்புப் (DBC) பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதன் அவசியம் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், டெங்குவை ஆரம்பத்திலேயே கண்டறிதல், தேவையான ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், நோயாளிகளின் மருத்துவ நிலையை மதிப்பிடுதல், எச்சரிக்கை அறிகுறிகளை கண்டறிதல், உரிய நேரத்தில் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், திரவ சிகிச்சை அளித்தல், தீவிர டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குதல் மற்றும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்தப் பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையுடன் இணைந்து தொடர்புடைய பிற துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றி சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.