தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்-அமைச்சர் விஜய் நாளை (செப். 21) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. இந்த காலத்தில் புயல் உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக நாளை நண்பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் விஜய் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்தக் கூட்டத்தில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர். நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பலவீனமாக உள்ள மின்கம்பங்களை சீரமைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.