தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும் தனித்துவமான திரைப்படங்களையும் வழங்கி வரும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாடர்ன் லவ் சென்னை’ போன்ற படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், அப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். முன்னதாக, இப்படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தது. படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெளியீட்டுத் தேதி உறுதியாகியுள்ளதால், விஜய் சேதுபதி மற்றும் தியாகராஜன் குமாரராஜாவின் கூட்டணியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.