வகுப்பறை முதல் ஆய்வகம் வரை... அரசு பள்ளிகளின் தேவைகள் பட்டியல் வெளியானது!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வகுப்பறை முதல் ஆய்வகம் வரை... அரசு பள்ளிகளின் தேவைகள் பட்டியல் வெளியானது!

வகுப்பறை முதல் ஆய்வகம் வரை... அரசு பள்ளிகளின் தேவைகள் பட்டியல் வெளியானது!

பள்ளிக்கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் எப்போது முழுமையாக சரிசெய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தற்போது 5,641 வகுப்பறைகள் மற்றும் 5,880 கழிவறைகள் தேவைப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் கடந்த அரசுகள் கவனம் செலுத்திய நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள அரசும் அதே நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை விவரங்களை கேட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் இருந்து தேவைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான உத்தேச செலவு விவரங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2026-27ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு 5,641 புதிய வகுப்பறைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறைக்கு சுமார் ரூ.25.97 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக மொத்தம் சுமார் ரூ.1,465 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.கழிவறை வசதியை பொறுத்தவரை, மாணவர்களுக்காக 3,142 கழிவறைகளும், மாணவிகளுக்காக 2,738 கழிவறைகளும் என மொத்தம் 5,880 கழிவறைகள் தேவைப்படுகின்றன. இவற்றை அமைக்க சுமார் ரூ.620 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 1,340 இடங்களில் குடிநீர் வசதிகள் தேவைப்படுவதாகவும், இதற்காக சுமார் ரூ.59 கோடி செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதுதவிர, அரசு பள்ளிகளில் 2,361 ஆய்வகங்கள் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இதற்காக ரூ.1,598 கோடியே 24 லட்சம் வரை செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் அமைப்பதற்காக மட்டும் சுமார் ரூ.458 கோடி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அரசு பள்ளிகளின் மேற்கண்ட உள்கட்டமைப்பு தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு சுமார் ரூ.4,200 கோடி வரை தேவைப்படும் என பள்ளிக்கல்வித் துறை அரசிடம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு பணிகள் எந்த வகையில், எப்போது மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.