சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய லாரி மற்றும் அதன் ஓட்டுநரைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மானாமதுரை பகுதியில் உள்ள வைகை ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை அறிந்த அங்கிருந்தவர்கள், ஜே.சி.பி. இயந்திரம், லாரி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் செல்ல முயன்றனர். இதனால், போலீசார் அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அப்போது, ஜே.சி.பி. இயந்திரத்தைப் பின்தொடர்ந்த போலீசாரின் நடவடிக்கைக்குத் தடையாக, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, மணலுடன் தப்பிச் சென்ற லாரியையும் அதன் ஓட்டுநரையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.