பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தின் ஆலியா பட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய கடைசி படைப்பு ‘ஹீரமண்டி’ வெப் சீரிஸ் ஆகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தில் ரன்பீர் கபூரை இயக்கியிருந்தார் பன்சாலி. சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆலியா பட்டுடன் பன்சாலி ஏற்கனவே ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் பணியாற்றியுள்ளார். அதேபோல், விக்கி கவுசலுடன் அவர் இணையும் முதல் திரைப்படம் இதுவாகும். ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரன்பீர் கபூர் பழமையான கார் ஒன்றை ஓட்டியபடி தோன்றுகிறார். பின்னால் வாரிய தலைமுடி, பென்சில் மீசை மற்றும் வட்ட வடிவ கண்ணாடி என வித்தியாசமான தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார். மேலும், அவரது இடது கையில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது ஆலியா பட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.